டி.ராஜேந்தரின் உடல் நிலை.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!
டி.ராஜேந்தரின் உடல் நிலை.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!
திரைப்பட இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தருக்கு கடந்த 19-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அதன் பின்னர் அந்த மருத்துவமனையில் இருந்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். டி.ராஜேந்தர் உடல்நிலையை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரது வயிற்றுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து அவரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து டி.ராஜேந்தரை தனி விமானம் மூலம் அமெரிக்கா அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், நடிகரும் டி ராஜேந்தரின் மூத்த மகனுமான சிம்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு கூறியிருப்பதாவது: “எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.
அங்கு நடந்த பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர்தர சிகிச்சை தர வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்.
அவர் முழு சுயநினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கு அனைவரின் அன்புக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.