கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கடந்த 31-ம் தேதியோடு கொரோனா நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கொரோனா பரவல் விகிதத்தை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் இது சம்பந்தமான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் எனவும் ஒன்றிய அரசு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து மராட்டிய மாநிலம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளன. அதே சமயம் மாஸ்க், கை கழுவுதல், சானிடைசர் உபயோகித்தல் உள்ளிட்ட அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதல் தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 75 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கொரோனா காலத்தில், பொது சுகாதார சட்டத்தின்படி தமிழ்நாடு அரசு விதித்திருந்த பல்வேறு கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அரசின் நிலையான வழிகாட்டுதல்களான தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை சுய விருப்பத்தின் அடிப்படையில் பொது மக்கள் பின்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.