உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்!!

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்!!

Update: 2022-03-08 07:51 GMT

உக்ரைனில் ரஷ்யா 13ஆவது நாளாக தாக்குதல் நடத்திவரும் சூழலில், பிற நாட்டை சேர்ந்தவர்களும் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து போரிடலாம் என்று அந்நாட்டு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில்கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் சாய்நிகேஷ் என்பவர் உக்ரைன் துணை ராணுவப்படையில்  இணைந்துள்ளார். இது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன் நாட்டில் நடைபெறும் போர் காரணமாக இந்திய மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். தமிழக மாணவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் என்ற விமானவியல் மாணவர்  உக்ரைன் நாட்டின்  துணை இராணுவத்தில் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது.

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு  முதல் உக்ரைனில் உள்ள கார்கோ  நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார்.

தற்போது 4ம் ஆண்டு படித்து வரும் அவர் உக்ரைன் நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை இராணுவ பிரிவில் இணைந்துள்ளது இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறு வயது முதலே இராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பிய சாய்நிகேஷ் ரவிசந்திரன், அதற்காக இந்திய ராணுவத்திற்கு  விண்ணப்பித்து இருந்தார். ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் இந்திய இராணுவத்தில் அவர் சேர்க்கப்பட வில்லை.

இதனையடுத்து சாய்நிகேஷ் குறித்து விசாரணை நடத்திய உளவுத்துறை அதிகாரிகள் கோவை துடியலூர் சுப்பிரமணியம் பாளையத்தில் உள்ள அவரது வீட்டை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஏராளமான ராணுவ வீரர்களின் புகைபடங்கள் வைக்கப்பட்டு இருப்பதை பார்த்துள்ளனர்.

பெற்றோருடன் தொடர்பில் இருக்கும் சாய்நிகேஷ்  ரவிச்சந்திரன் ஊருக்கு வர விரும்பவில்லை என தெரிவித்துள்ள நிலையில் இது குறித்து மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News