டாஸ்மாக் மதுக்கடை திறக்கக்கூடாது.. கலெக்டரிடம் பொதுமக்கள் மனு..!
டாஸ்மாக் மதுக்கடை திறக்கக்கூடாது.. கலெக்டரிடம் பொதுமக்கள் மனு..!
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரி, அருங்கால், கீரப்பாக்கம், காட்டூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதியில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் அருகிலேயே தேவாலயங்கள், திருக்கோவில்கள், பூங்கா,மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் என அனைத்தும் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரி சாலையில் உள்ள சிவம் அவென்யூ சர்வே 205/49,50 அடங்கியுள்ள மனைகளில் புதிதாக அரசு மதுபானக் கடை துவக்கப் போவதாக கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் புதிதாக மதுக்கடை துவங்கினால் ஊரப்பாக்கம் பகுதியிலிருந்து காரணை புதுச்சேரி வழியாக செல்லும் சாலையில் கிராமப்புற பகுதிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் செல்லக்கூடிய மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவதோடு அச்சுறுத்தல் ஏற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, புதிய மதுபான கடைக்கு அனுமதி வழங்க கூடாது என பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குறிப்பிட்ட பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை பரிசீலித்து கடையை திறக்கக் கூடாது என சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.