தெலுங்கானா வங்கி லாக்கர் உடைப்பு!! 7 லட்சம் ரூபாய் பணம் தீயில் கருகி சாம்பல்..!!
தெலுங்கானா வங்கி லாக்கர் உடைப்பு!! 7 லட்சம் ரூபாய் பணம் தீயில் கருகி சாம்பல்..!!
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பூசாப்பூரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி தெலுங்கானா கிராமிய வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் வங்கி பூட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று வழக்கம் போல், அதிகாரிகள் வங்கியை திறப்பதற்காக வந்தபோது, வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த வங்கி லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.4 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், லாக்கரை உடைக்க கேஸ் கட்டர் பயன்படுத்தியபோது, அதில் இருந்த சுமார் 7 லட்சம் ரூபாய் பணம் தீயில் கருகி சாம்பலாகி உள்ளது.
மேலும், வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, பின்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பாதுகாப்பு அலாரத்தின் இணைப்பை துண்டித்து, பின் லாக்கரை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட லாக்கரின் அருகில் பெரிய லாக்கர் ஒன்றும் இருந்தது. அதனை கொள்ளையர்கள் திறக்காமல் சென்றதற்கு காரணம், தெரியாத நிலையில், உடைக்கப்படாத பெரிய லாக்கரில், ரூ.6 கோடி மதிப்பிலான தங்கநகைகள் கொள்ளையர்களிடம் இருந்து தப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நிஜாமாபாத் போலீசார் மூன்று தனிப்படைகள் அமைத்து, வங்கியில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தீவரமாக தேடி வருகின்றனர்.