பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாதா..?: மத்திய அமைச்சர் சொல்வதென்ன..?
பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாதா..?: மத்திய அமைச்சர் சொல்வதென்ன..?
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்கள் செல்லுமா, செல்லாதா..? என மக்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது. பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள், மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
பத்து ரூபாய் நாணயங்களை ரிசர்வ் வங்கி தடை செய்துவிட்டது என்கிற வதந்தியும், பத்து ரூபாய் நாணயங்களைப் போல போலி நாணயங்கள் சந்தையில் இருக்கின்றன என்கிற செய்தியும்தான் மக்களை குழப்பத்தில் தள்ளியது. இதனால், பத்து ரூபாய் நாணயங்களை பயன்படுத்துவதற்கு இடையூறாக அமைந்தது.
இந்த குழப்பங்களைத் தொடர்ந்து, மக்களுக்கு பத்து ரூபாய் நாணயங்கள் மீதான அச்சத்தைப் போக்கும் விதமாக, பத்து ரூபாய் நாணயங்கள் முழுமையாக செல்லத்தக்கது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
அப்படியும் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் இருந்து வந்தது. ஏனெனில், பத்து ரூபாய் நாணயங்களை டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளிலும் வாங்குவதற்கு மறுப்பதே காரணமாகும்.
இதனால், 10 ரூபாய் நாணயம் செல்லுமா, செல்லாதா? என்று ஒரு அறிவிப்பு வெளியிடுமாறு பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இன்னும் 10 ரூபாய் நாணயத்தை பல பகுதிகளில் வாங்க மாட்டேன் என்கிறார்கள் என்று புகார் எழுந்தது. 14 வகை நாணயங்களுமே ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணயங்கள் தான். போலியானவை அல்ல என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி உபயோகிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் சட்டப் பூர்வமாக நடைபெறும் டெண்டர்கள், பரிவர்த்தனைக்கு 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம் என்றும் விளக்கமளித்தார்.