அக்னிபத் திட்ட ஆள் சேர்ப்புக்கான அட்டவணையை வெளியிட்டது மத்திய அரசு
அக்னிபத் திட்ட ஆள் சேர்ப்புக்கான அட்டவணையை வெளியிட்டது மத்திய அரசு
முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்குக நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த திட்டத்தை திரும்ப பெறக்கோரி பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதில் பீகார், உத்தரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதைப்போல அக்னிபத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. எனினும் இந்த திட்டம் திரும்ப பெறப்பட மாட்டாது என மத்திய அரசின் ராணுவ நலத்துறை கூறியுள்ளது. இது தொடர்பாக ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, முப்படைகளை இளமையாக மாற்றுவதற்கு இது ஒரு முற்போக்கான நடவடிக்கை. அப்படியிருக்க அக்னிபத் திட்டத்தை ஏன் திரும்பப்பெற வேண்டும்? இந்த போராட்டம் மற்றும் வன்முறைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இதில் தீ வைப்பு, வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு இடமில்லை. அக்னிபத் திட்டத்தில் முப்படைகளில் சேர்வோரிடம் இருந்து, இதுபோன்ற போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபடவில்லை என்ற சான்றிதழ் பெறப்படும். போலீஸ் மூலமான சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படும். அப்போது யார் மீதாவது போலீஸ் வழக்கு இருப்பது கண்டறியப்பட்டால், அவரால் ராணுவத்தில் சேர முடியாது என்றார்.
போராட்டத்தின் பின்னர்தான் இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறுவது தவறு. ராணுவத்தில் இத்தகைய சீர்திருத்தம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டம் மூலம் ராணுவ வீரர்களின் சராசரி வயது 32-ல் இருந்து 26 ஆக குறையும். நமது நாடு இளமையானது. அப்படியிருக்க ராணுவம் 32 வயதில் இருப்பது நன்றாக இருக்காது.
இந்த நிகழ்ச்சியின்போது, அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு விரிவான அட்டவணையை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் வெளியிட்டனர்.
அதன்படி ராணுவத்தின் ஆட்சேர்ப்பு திட்டம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பன்சி பொன்னப்பா, 40 ஆயிரம் வீரர்களை தேர்வு செய்ய நாடு முழுவதும் 83 ஆட்சேர்ப்பு முகாம்கள் நடத்தப்படும். இதற்காக வரைவு அறிக்கை திங்கட்கிழமை (இன்று) வெளியிடப்படும். அடுத்தடுத்த அறிவிப்புகள் ஜூலை 1 முதல் பல்வேறு ஆட்சேர்ப்பு பிரிவுகளால் வெளியிடப்படும், என்று கூறினார்.
நாடு முழுவதும் ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு முகாம்கள் நடைபெறும் எனக்கூறிய அவர், இதில் தேர்வு செய்யப்படும் 25 ஆயிரம் பேர் அடங்கிய முதல் குழுவினர் டிசம்பர் முதல் மற்றும் 2-வது வாரங்களில் பயிற்சியில் சேர்வார்கள் என தெரிவித்தார்.
இரண்டாவது பிரிவினர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பயிற்சியில் சேர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். கடற்படை, விமானப்படை கடற்படையில் ஆட்சேர்ப்பு தொடர்பாக துணை அட்மிரல் தினேஷ் திரிபாதி கூறும்போது, 'அக்னிபத் திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் 25ஆம் தேதிக்கு முன் வெளியிடப்படும்.
தொடர்ந்து நடத்தப்படும் ஆட்சேர்ப்பு முகாம்கள் மூலம் தேர்வு செய்யப்படும் வீரர்களின் முதல் பிரிவினர் நவம்பர் 21-ந்தேதிக்கு முன் பயிற்சியில் சேர்வார்கள். இந்த திட்டத்தின் கீழ் ஆண்களும், பெண்களும் தேர்வு செய்யப்படுவார்கள், என்று தெரிவித்தார்.
newstm.in