தாஜ்மகால் இருப்பதே எங்கள் குடும்ப நிலத்தில் தான்.. அதனால்.. பாஜக எம்பி.யால் பரபரப்பு !!

தாஜ்மகால் இருப்பதே எங்கள் குடும்ப நிலத்தில் தான்.. அதனால்.. பாஜக எம்பி.யால் பரபரப்பு !!

Update: 2022-05-12 09:42 GMT

இந்தியாவின் புராதன சின்னமாகவும் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது தாஜ்மகால். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நகரின் யமுனை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள தாஜ்மகால் காதல் சின்னமாகவும் விளங்குகிறது. வெளிநாட்டினர், உள்நாட்டு மக்கள் என தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். 

முகலாய மன்னர் ஷாஜகான், அவரது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டியது. ஆனால், தற்போது தாஜ்மகால் என்னவாகுமோ என்ற அச்சம் தற்போது நாட்டு மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. தாஜ்மகாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளை திறந்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அங்கு இந்து கடவுள் சிலைகள் இருப்பதாக இந்து அமைப்பினர் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், தாஜ்மகால் அமைந்துள்ள நிலம் தங்கள் குடும்ப சொத்து என்று பாஜக எம்.பி தியா குமாரி  தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாஜ்மகால் அமைந்துள்ள இடத்தில் எங்களது நிலமும் இருந்தது. தனி நபர்களிடம் உள்ள நிலத்தை அரசு கையகப்படுத்தும் போது அதற்கான தொகையை வழங்குவது வழக்கம். அது போல அப்போது அந்த நிலப்பரப்பை ஆண்ட அரசன் இழப்பீடு தொகையை வழங்கியதாக நான் கேள்விப்பட்டேன். இருந்தாலும் அதை எதிர்த்து யாராலும் அப்போது குரல் கொடுக்க முடியவில்லை. ஏனெனில் அப்போது அவர்கள் ஆட்சியில் இருந்தார்கள்.

அந்த இடம் எங்களுக்கு சொந்தம் என்பதற்கான ஆவணம் கூட எங்களிடம் உள்ளது. அது ஜெய்ப்பூர் ராஜ வம்சத்தின் பதிவேடுகளுக்கான அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை தர நாங்கள் தயாராக உள்ளோம்.  அந்த நிலத்தை ஷாஜகான் கையகப்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளது. ஆனால், அதனை நான் இன்னும் முழுவதுமாக பார்க்கவில்லை என்றார்.

அதற்காக நான் தாஜ்மகால் இடிக்கப்பட வேண்டும் என சொல்லவில்லை. ஆனால், அங்கு பூட்டப்பட்டுள்ள அறையில் என்ன உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தாக வேண்டும். அந்த அறையின் கதவுகளை திறந்தால் உண்மை வெளிவரும், என அவர் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இவரும் இந்து அமைப்புகள் கூறிய கருத்தைதான் கூறவருகிறார் என்பது தெளிவாகியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News