உயிரிழந்த பள்ளி மாணவி உடல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது !!

உயிரிழந்த பள்ளி மாணவி உடல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது !!

Update: 2022-07-23 08:20 GMT

உயிரிழந்த பள்ளி மாணவி உடல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று நடந்த விசாரணையின் போது மாணவி ஸ்ரீமதியின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டனர். காலை 6.50 மணியளவில் மாணவி ஸ்ரீமதியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுகொண்டனர். ஸ்ரீமதியின் தாயார் கையெழுத்துப்போட்டு தனது மகளின் உடலை பெற்றுக்கொண்டார்.

மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து ஸ்ரீமதியின் உடல் அவரது சொந்த ஊரான பெரியநெசலூர் கொண்டு செல்லப்பட்டுகிறது. முன்னதாக, மருத்துவமனையில் இருந்த ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் கணேசன், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவு கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத், பெற்றோர்கள் மாணவியின் உடலை பெற்றுக் கொண்டு சொந்த ஊருக்கு கொண்டு செல்ல பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

அதன்படி, உயிரிழந்த பள்ளி மாணவி உடல் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டது. ஆனால் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியது. இதில் ஆம்புலன்சின் முன் பகுதியில் ஏற்பட்ட சிறிய சேதம் சரிசெய்யப்பட்டு மீண்டும் வாகனம் புறப்பட்டது.

இதனிடையே, கள்ளக்குறிச்சி மாணவியின் உடலுக்கு அவரது சொந்த ஊரான பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், காவல்துறை தெரிவித்துள்ளது. வெளி ஆட்களோ, பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஒலிபெருக்கி மூலமாக போலீசார் அறிவுறுத்தினர்.

newstm.in 

Similar News