இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய கலவரம் நடைபெறவில்லை என்று ஈஷா யோகா மைய நிறுவனர் ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

இயற்கை, மண்வளம் குறித்து பேசி வரும் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் கோவையில் பிரமாண்ட யோகி சிலை அமைத்து வழிபட்டு வருகிறார். இங்கு நடக்கும் சிவராத்திரி திருவிழா மிகவும் பிரபலமானது. இவர் காடுகளை அழித்து அதில் சிலை அமைத்துவிட்டு இயற்கை, மண்வளம் குறித்து பேசுவது அநாகரிகம் என்று ஒருதரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். சத்குரு அவ்வப்போது அரசியல் குறித்தும் பேசி வருகிறார். 

அந்த வகையில் தற்போத பேசிய அவர், நாள்தோறும் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் இருந்து நேரடியாக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவது மிகவும் துயரமானது.

ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவே கொரோனா உயிரிழப்பு அதிகரித்தது. வளர்ந்த நாடான அமெரிக்காவில் அதிகபட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் அந்த நாட்டின் மண் வளம் குறைந்திருக்கிறது. மண் வளத்தை அதிகரித்து, ஊட்டச்சத்தான தானியங்களை விளைவித்து உட்கொண்டால், எந்தவொரு நோயையும் எதிர்கொள்ளும் திறனை மனித உடல் பெறும்.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்துவருவது கவலையளிக்கிறது. மன நலனுக்கும் வன்முறைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் வன்முறை காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இது மோசமான சூழலை உருவாக்கும்.

என்னுடைய கல்லூரி பருவத்தில் இந்தியாவில் மிகப்பெரிய கலவரங்கள் நடைபெற்றன. கடந்த 25 ஆண்டுகளாக நாட்டில் கலவரங்கள் கணிசமாக குறைந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மிகப்பெரிய கலவரம் நடைபெறவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலவரங்கள் மிகைபடுத்தி கூறப்படுகின்றன.

அமெரிக்க தேர்தல் நடைமுறையின் மீது அந்த நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைக்கவில்லை. இந்திய தேர்தல் நடைமுறையை அவர்கள் பாராட்டுகின்றனர். கடந்த காலங்களைவிட இப்போது சர்வதேச அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பு அதிகரித்துள்ளது, என அவர் தெரிவித்துள்ளார்.


newstm.in
 

Tags: