சொந்த ஊருக்கு வந்தடைந்தது மாணவியின் உடல்.. கதறி அழுத கிராம மக்கள் !!
சொந்த ஊருக்கு வந்தடைந்தது மாணவியின் உடல்.. கதறி அழுத கிராம மக்கள் !!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இதனையடுத்து மாணவியின் இறப்புக்கு நீதிகேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. பின்னர் மறுபிரேதபரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று காலை 6.50 மணியளவில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்ரீமதியின் தாயார் கையெழுத்துப்போட்டு தனது மகளின் உடலை பெற்றுக்கொண்டார். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
ஆம்புலன்ஸ் வழியில் சிறிய விபத்தில் சிக்கிய நிலையில், மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வெளியூர் மக்கள், அமைப்பினர் அஞ்சலி செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் திரண்டு மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பெரிய நெசலூர் கிராமத்தில் இன்று இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. மாணவியின் இறுதி ஊர்வலத்தில் உறவினர்களும் உள்ளூர் மக்களும் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் என்றும், காவல்துறை தெரிவித்துள்ளது. வெளி ஆட்களோ, பிற அமைப்புகளோ இதில் பங்கேற்கக் கூடாது என்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஒலிபெருக்கி மூலமாக போலீசார் அறிவுறுத்தினர்.
newstm.in