உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம்  செய்தார்.

அதை தொடர்ந்து, அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். ட்விட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில் ட்விட்டரில் 20 முதல் 50 சதவீதம் வரை போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த  கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ஆனால் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால்,  5 சதவீதத்திற்கு குறைவாகவே போலி கணக்குகள் உள்ளதாக தெரிவித்தார். இதனால் முன்னர் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையே, ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி ட்விட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், 2 மாதங்களாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர ட்விட்டர் நிறுவனம் மறுத்து வந்தது.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த 9-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். ட்விட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டுமென தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு டெல்லவிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்குமாறு எலான் மஸ்க் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணை வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

Tags: