வாடகைக்கு வீடு எடுத்து லீசுக்கு விட்டு ரூ.20 கோடி சுருட்டிய நிறுவனம்!!
வாடகைக்கு வீடு எடுத்து லீசுக்கு விட்டு ரூ.20 கோடி சுருட்டிய நிறுவனம்!!
வீட்டை வாடகைக்கு எடுத்து லீசுக்கு விட்ட விவகாரத்தில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த கும்பல் தலைமறைவாகியிருப்பதாக பாதிக்கப்பட்ட 154 பேர் பள்ளிகரணை காவல் துணை ஆணையாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியில்சோலை முத்துராஜா என்பவர் குரு ரியால்ட்டி அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் புதிதாக கட்டப்படும் வீடுகளை குறிவைத்து வீட்டிற்கு வாடகை தருவதாக கூறி வீட்டின் உரிமையாளர்களிடம் ஒப்பத்தம் போட்டுள்ளனர்.
அதன் பிறகு அந்த வீட்டை வீடு தேடும் நபர்களுக்கு லீசுக்கு விடுவதாக OLX ஆன்லைன் நிறுவத்தின் மூலம் விளம்பரம் செய்துள்ளனர். இந்த விளம்பரத்தை பார்த்த வீடுகளை தேடி அலைந்த நூற்றுக்கணக்கானோர் ரூபாய் 4 லட்சம் முதல் 30 லட்சம் வரை கொடுத்து ஒப்பந்தம் போட்டு வீடுகளை லீசுக்கு பெற்றுள்ளனர்.
இப்படி வீடுகளை லீசுக்கு எடுப்பவர்கள் அந்த வீட்டின் உரிமையாளருக்கு தெரிந்தபடியே ஒப்பந்தம் செய்துள்ளனர். அதேபோல் வீட்டின் உரிமையாளர்களும் குரு ரியால்ட்டி அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் மாத வாடகைக்கு வீட்டை கொடுப்பதாகவும் அதை அவர்கள் மற்றவர்களுக்கு லீசுக்கு விடுவதையும் அறிந்தே ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
இப்படியான சூழலில் கடந்த சில மாதங்களாக வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகை தரவில்லை என்பதால் உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேருங்கள் என்று கூறியுள்ளனர்.
அதற்கு வீட்டில் வசிப்பவர்கள் லட்சக்கணக்கில் முன் பணம் செலுத்தி வீட்டை லீசுக்கு எடுத்துள்ளது தங்களுக்கு தெரிந்ததுதானே திடீரென வெளியேற சொன்னால் நாங்கள் எங்கு செல்வோம் நாங்க லீசுக்கு கொடுத்த முன் பணம் வரும் வரை நாங்கள் இங்குதான் இருப்போம் என கூறியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தனர். ஊழியர்களோடு உரிமையாளர் சோலை முத்துராஜாவும் தலைமறைவானார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை தொடர்ந்து பள்ளிகரணை துணை ஆணையர் அலுவலகத்தில் 154 பேர் குழுவாக புகார் அளித்தனர்.
சோலை முத்துராஜா சுமார் 20 கோடிக்கு மேல் பண மோசடி செய்துள்ளதாகவும், இன்னும் பலர் சோலைமுத்துராஜாவிடம் ஏமாற்றப்பட்டிருப்பார்கள் அவர்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு அதிகரிக்கலாம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
பலரும் ஏமாற்றப்பட்டு அந்த நிறுவனத்தை தேடி வந்தபோதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததாக காதர் தெரிவித்தார். வீட்டை லீசுக்கு கொடுக்காமலே ரூபாய் 18 லட்சத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளனர் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in