கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக தார் சாலை போட்ட காணொலி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் வளர்ச்சி மட்டுமே அரசின் தாரக மந்திரம் எனக் கூறி அடிப்படை வசதிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துவதாக முதலமைச்சர் பகவந்த் மான் கூறிவருகிறார்.

அத்துடன் ஊழலற்ற தூய்மையான நிர்வாகமே ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை விதி என கூறி, ஊழல் புகார்களுக்கு ஆளாகும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அம்மாநிலத்தின் ஹோஷியார்பூர் என்ற பகுதியில் பொதுப்பணித்துறை ஒப்பந்தரார்கள் தார் சாலை போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் பணி செய்யும் போது அங்கு மழை வேகமாக பெய்யத் தொடங்கியது. அந்த சூழலிலும் பணியை நிறுத்தாமல் சாலை போடுவதைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.


அப்பகுதியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி ஊழியர் குர்விந்தர் சிங், இவ்வாறு சாலை போடுவது முறையல்ல, சாலை தரமற்றதாக இருக்கும் எனவே மழை நேரத்தில் வேலையை நிறுத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அவரின் பேச்சை கேட்காமல் பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்கள் வேலையை தொடர்ந்து செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்னின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகார் அளிக்கவுள்ளேன் என குர்விந்தர் தெரிவித்தார். இந்நிலையில், கொட்டும் மழையிலும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் தார் சாலை போடுவது காணொலியாக சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த திட்டத்தில் ஈடுபட்ட நான்கு பொதுப்பணித்துறை பொறியாளர்களை அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

newstm.in