ரஜினிக்காக காத்திருந்த ரசிகர்.. 30 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் வாக்கை பதிவு செய்தார்..!
ரஜினிக்காக காத்திருந்த ரசிகர்.. 30 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் வாக்கை பதிவு செய்தார்..!
புதுக்கோட்டை ராஜகோபால புரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். ரஜினியின் தீவிர ரசிகரான இவர், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார்.
ரஜினி அரசியலுக்கு வருவார், அவருக்குத் தான் தனது முதல் வாக்கை செலுத்த வேண்டும் என்று 30 ஆண்டுகளாக காத்திருந்தார். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார் என்று தெரிந்ததால், தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது முதல் வாக்கை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது; “சிறு வயது முதலே ரஜினியின் தீவிர ரசிகனா இருக்கேன். ரஜினி மன்றத்தின் மூலம் அவ்வப்போது மக்கள் பணி செய்து வருகிறேன்.
ரஜினி அரசியலுக்கு வரணும், அவருடன் சேர்ந்து நாங்கள் மக்கள் பணி செய்யலாம்னு காத்திருந்தோம். அவர் எப்படியும் அரசியலுக்கு வந்துவிடுவார். அவருக்குத் தான் என்னோட முதல் ஓட்டு போடணும்னு வைராக்கியத்தோடு தான் இவ்வளவு வருஷம் இருந்தேன்.
எனக்கு இப்போது 48 வயது ஆகிறது. என்னுடைய 18 வயதில் வாக்காளர் அடையாள அட்டை வாங்கினேன். அன்று முதல், தலைவருக்காக தான் முதல் ஓட்டுன்னு, 30 வருஷமா ஓட்டு போடல.
ஆனா இப்போ, தலைவர் அரசியலுக்கு வர மாட்டேன்னு சொல்லி அதிர்ச்சி கொடுத்துட்டாரு. அதனால், இந்த முறை ஓட்டு போட முடிவு செய்து, முதல் முறையாக ஓட்டு போட்டுருக்கேன். ஜனநாயக கடமை செய்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு” என்றார்.