கொலை செய்த மகனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிக் கொடுத்த தந்தை!!
கொலை செய்த மகனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டிக் கொடுத்த தந்தை!!
மும்பையில் இளம்பெண் கொலை வழக்கில், குற்றவாளியின் தந்தையே தனது மகனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி கொடுத்திருக்கிறார்.
மிஸ்குய்ட்டா பகுதியைச் சேர்ந்த கேரல் (29) என்ற பெண் கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தோழி ஒருவரை சந்திக்க போவதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு கேரல் சென்றார். ஆனால், இரவு 10 மணிக்கு மேலாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் பதற்றமடைந்த அவரது பெற்றோர், இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து கேரலை தேடி வந்தனர். இந்த சூழலில், பல்கார் நகரில் உள்ள புதர் ஒன்றில் கேரலின் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர்.
பிரேதப் பரிசோதனையில் அவர் அடித்துக் கொல்லப்பட்டிப்பது தெரியவந்தது. விசாரணையில் அவரது நண்பரான ஜீக்கோ (27) என்பவருடன் தான் கேரல் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ஜீக்கோவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனாலும் அவர் உண்மையை கூறவில்லை. அதே சமயத்தில், ஜீக்கோவின் தந்தையான அன்சேம், தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தார். அதில் தனது மகன் ஜீக்கோ, மோட்டார் சைக்கிளில் வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அதேபோல, ஜீக்கோ வீட்டில் மறைத்து வைத்திருந்த அவரது லேப்டாப்பையும் எடுத்து, அதில் இருந்த சில ஆதாரங்களையும் அன்சேம் திரட்டினார். பின்னர், காவல் நிலையத்திற்கு போன் செய்த அவர், தனது மகன் ஜீக்கோவுக்கு எதிரான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக கூறினார்.
தொடர்ந்து, அவரது வீட்டுக்கு சென்ற போலீஸார் அவர் கொடுத்த ஆதாரங்களை எடுத்துச் சென்றனர். அந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே, ஜீக்கோவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், திருமணம் செய்து கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்த காரணத்தால் கேரலை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
newstm.in