மகனை கொன்றுவிட்டு தூக்கிட்டு இறந்ததாக நாடகமாடிய தந்தை!!
மகனை கொன்றுவிட்டு தூக்கிட்டு இறந்ததாக நாடகமாடிய தந்தை!!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தை, தற்கொலை செய்து கொண்டு மகன் இறந்ததாக நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொளசம்பட்டி தாசன்காடு பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், தனபாலின் மனைவி அவரை பிரிந்து வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தொளசம்பட்டி பகுதியில் தனது தந்தையுடன் வசித்து வந்தார். மேலும், இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தாய் தந்தையை அடித்து தகராறில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி தனபால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தொளசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது இரண்டு கால்களை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து தொளசம்பட்டி போலீசார், சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றி, தனபாலின் தந்தை பெருமாள், பெருமாளின் அக்காள் மகன் சரண்ராஜ் (19) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், தன்பால் குடிபோதையில் கத்தியை எடுத்து கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும், அப்போது பெருமாள், சரண்ராஜ் இருவரும் பயந்து தங்களை கொலை செய்து விடுவார் என்று தனபாலை பிடித்துத் தள்ளி கழுத்தை நெரித்ததில் அவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், இதை மறைப்பதற்காக தனபால் உடலை தூக்கில் தொங்க விட்டதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து பெருமாள், சரண்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in