விளையாட்டு விணையானது.. மதுரை கோவில் திருவிழாவில் நடந்த சோகம் !!

விளையாட்டு விணையானது.. மதுரை கோவில் திருவிழாவில் நடந்த சோகம் !!

Update: 2022-06-09 07:52 GMT

கோவில் திருவிழாக்கள் என்றாலே வண்ண விளக்குகளின் அலங்காரமும், பட்டாசுகளும் முன்னிலை பெறும். தற்போது அனைத்து கோவில்களிலும் விண்ணை முட்டும்வகையில் பல வண்ணங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படும். இது பக்தர்களை வியப்படையச்செய்யும். ஆனால் சில நேரங்களில் சிறு தவறால் பெரும் ஆபத்து ஏற்படுவதும் உண்டு.

அந்த வகையில், மதுரை திடீர்நகர் அருகே உள்ள மேலவாசலில் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று பூப்பல்லக்கு நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக தீ பந்த விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.


 
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் சரவெடி பட்டாசு வெடித்துள்ளனர். இதில், எதிர்பாராதவிதமாக சர வெடி பட்டாசு மூலம் வெளியான தீப்பொறி திருவிழாவிற்காக அமைக்கப்பட்ட பந்தலின் மீது விழுந்தது. இதில் பந்தலில் தீபற்றி எரியத்தொடங்கிய சிறிது நேரத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். இதையடுத்து தீ பந்தல் முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில் தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்தனர். அவர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். திருவிழாவின் போது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்து குறித்து திடீர்நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தீ பற்றியதும் பந்தலில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் பெரியளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 


newstm.in

Similar News