போதையில் மனைவியை கொன்றதையே மறந்த கணவன்!!
போதையில் மனைவியை கொன்றதையே மறந்த கணவன்!!
கரூர் அருகே குடிபோதையில் இரண்டாவது மனைவியை கொன்றதையே கணவன் மறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளியணை அடுத்த பள்ளசங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தனபால் (34) என்பவர் மேனகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேனகாவின் அக்கா அம்பிகாவின் கணவர் விபத்தில் இறந்துவிட்டார்.
இதனையடுத்து தனபால், அம்பிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அம்பிகா வீடு திரும்பவில்லை. இது குறித்து கணவர் தனபாலிடம், மேனகா கேட்டபோது அம்பிகாவை அம்மா வீட்டுக்கு அனுப்பியதாக கூறினார்.
அம்மா வீட்டுக்கும் அம்பிகா செல்லவில்லை. இதையடுத்து தனது சகோதரியை காணவில்லை என மேனகா வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகார் அடிப்படையில் வெள்ளியணை காவல் நிலைய போலீசார் தனபாலிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தனது இரண்டாவது மனைவி அம்பிகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கொன்று புதைத்துவிட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த போலீசார் புதைத்த இடம் குறித்து கேட்டபோது, போதையில் இருந்ததால், புதைத்த இடம் தெரியவில்லை என கூறி பல இடங்களுக்கும் போலீசாரை அழைத்துச் சென்று மூன்று நாட்களாக போலீஸாரை அலைக்கழித்து உள்ளார்.
இந்நிலையில், வெள்ளியணை அடுத்த மேட்டுப்பட்டி அருகே உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனபாலையும் அழைத்துக் கொண்டு போலீசார் கிணற்றில் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்தது தனபாலின் இரண்டாவது மனைவி அம்பிகா என தெரிவந்தது.
இதையடுத்து, கிணற்றுக்குள் கிடந்த அம்பிகாவின் உடல் மீட்கப்பட்டு அந்த இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு உறவினரிடம் உடலை ஒப்படைத்துவிட்டனர். கொலை செய்த கணவர் தனபாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in