அடித்தாரா அமைச்சர்..?: மனு கொடுத்த பெண் விளக்கம்..!

அடித்தாரா அமைச்சர்..?: மனு கொடுத்த பெண் விளக்கம்..!

Update: 2022-07-14 05:55 GMT

விருதுநகர் அருகே, மனு கொடுக்க வந்த பெண்ணை வருவாய்த்துறை அமைச்சர் அடித்ததாகக் கூறும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலான நிலையில்,  “அமைச்சர் என்னை அடிக்கவில்லை; மனுவை வைத்து செல்லமாக தலையில் தட்டினார்" என்று சம்பந்தப்பட்ட பெண் விளக்கம் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தத்தில் கடந்த சனிக்கிழமை பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது, பாலவநத்தத்தைச் சேர்ந்த கலாவதி (55) என்பவர் தனது தாய் சகுந்தலா (77) என்பவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி அமைச்சரிடம் மனு கொடுத்தார்.

இதன்போது, அருகில் நின்ற மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் அமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். இடையே குறுக்கிட்டு பேசிய கலாவதியிடம் மனுவை வாங்கிய அமைச்சர், அந்த மனுவால் அவர் தலையில் லேசாக தட்டி “கொஞ்சம் பொறு” என்றார்.

இது குறித்த வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “மக்கள் என்ன உங்கள் அடிமைகளா..?. விருதுநகர், பாலவநத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத் தாயை அடித்த திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும். அல்லது, அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, மனு கொடுக்க வந்த பெண்ணை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அடித்ததாகக் கூறி, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், விருதுநகரில் உள்ள வருவாய்த் துறை அமைச்சர் வீட்டில் இன்று காலை பத்திரிகையாளர்களுக்கு கலாவதி பேட்டியளித்தார்.


அப்போது அவர், “வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வேறு யாருமல்ல; கடந்த 30 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல பழகி, எங்களுக்கு நல்லது கெட்டது அனைத்தும் பார்த்து வருகிறார்.

எனது தாய்க்கு முதியோர் உதவித்தொகை கோரி மனு அளித்தேன். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், ‘கண்டிப்பாக நான் செய்து தருகிறேன்; நான் செய்யாமல் வேறு யார் செய்வார்’ எனக் கூறி, மனு கொடுத்த கவரால் எனது தலையில் செல்லமாக தட்டினார். மேலும், இன்று (13-ம் தேதி) எனது தாய்க்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை பெற்றுக்கொண்டேன்” என்றார்.

Similar News