கொலையில் முடிந்த தண்ணீர் பிடிக்கும் பிரச்னை!!
கொலையில் முடிந்த தண்ணீர் பிடிக்கும் பிரச்னை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை பகுதியில் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரமேஸ்வரன் (27) என்பவர் ஆனைமலை மாசாணி அம்மன் கோவில் பகுதியில் தேங்காய் பழம் விற்கும் கடை நடத்தி வந்தார். பரமேஸ்வரன் வசிக்கும் குடியிருப்பின் அருகே அவரது சகோதரி பரமேஸ்வரியும் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பரமேஸ்வரிக்கும் அதே பகுதியில் வசித்து வரும் அகல்யா என்பவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்போது அகல்யாவின் கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பரமேஸ்வரனுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் தமிழ்செல்வன், அவரது உறவினர் ராகவேந்திரன் உள்ளிட்ட சிலர் பரமேஸ்வரனை சராமரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பரமேஸ்வரன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் பொதுமக்கள் கொடுத்த புகாரையடுத்து அங்கு விரைந்து வந்த ஆனைமலை போலீசார் இறந்த பரமேஸ்வரன் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அகல்யா, அவரது தாயார் பானுமதி உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய தமிழ்ச்செல்வன், ராகவேந்திரன் உள்ளிட்ட அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்.
newstm.in