தந்தையின் உடலை வணங்கிவிட்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி !!
தந்தையின் உடலை வணங்கிவிட்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி !!
உயிரிழந்த தந்தையின் உடலை வணங்கிவிட்டு மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச்சென்ற நிகழ்வு அனைவரையும் நெகிழச்செய்தது.
கடலூர் அருகே உள்ள சாவடி பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். இவரது மகள் அவந்திகா (15). தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது 10ஆம் பொதுத் தேர்வு நடந்து வருகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 தேர்வுகளை அவந்திகா எழுதியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஒரு திருமண நிகழ்ச்சியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது சிவகுமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பமே சோகத்தில் மூழ்கியது. இந்த நிலையில் இன்று 10ஆம் வகுப்பு கணக்கு தேர்வு நடைபெற்றது.
தந்தை உயிரிழந்த சோகத்தில் இருந்த அவந்திகா, எப்படி தேர்வு எழுதுவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். அப்போது அவரது குடும்பத்தினர் அவருக்கு தைரியம் கொடுத்து தேற்றினர். மேலும் தேர்வு எழுத கூறினர்.
இதையடுத்து மனதை திடப்படுத்திக்கொண்ட அவந்திகா, தனது தந்தையின் உடலை வணங்கிவிட்டு, கண்ணீருடன் பெரும் சோகத்துடன் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றார். அங்கு சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு ஆறுதல் கூறி, தைரியம் அளித்தனர். இதனால் அவரால் தேர்வு அறையில் தேர்வு எழுதமுடிந்தது. பின்னர் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவி தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ‘
newstm.in