சவர்மாவை தொடர்ந்து தொடரும் சோகம்.. நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலி !

சவர்மாவை தொடர்ந்து தொடரும் சோகம்.. நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலி !

Update: 2022-06-20 08:03 GMT

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள தாளக்குடி மருதமுத்து நகரில் சேகர் - மகாலெட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் 2 வயது மகன் சாய் தருண். இவர் உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு உடலில் ஒருவிதமான புண் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிறுவனின் தாய் மகாலெட்சுமி சிறுவன் சாய் தருணிற்கு இரவில் நூடுல்ஸ் சமைத்து கொடுத்துள்ளார். மீதமுள்ள நூடுல்ஸை ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். மறுநாள் காலை தாய் மகாலெட்சுமி சிறுவனுக்கு காலை உணவாக மீண்டும் ஃப்ரிட்ஜில் இருந்த நூடுல்ஸை எடுத்து கொடுத்துள்ளார்.

இதனை உண்ட சிறுவன் அன்று மாலை வரை வேறு எந்த உணவையும் உண்ணாமல் உடல் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மாலையில் சிறுவனுக்கு திடீரென வாந்தி எடுத்துவிட்டு சுருண்டு கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் மகாலெட்சுமி மகனை தூக்கிக்கொண்டு பேருந்துமூலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவலை கேட்டு தாய் மகாலெட்சுமி கதறி அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்கச்செய்தது. இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே உடல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் துரித உணவான நூடுல்ஸை உண்டதால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். எனினும் பிரேதபரிசோதனை அறிக்கைக்கு பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறுகின்றனர். 

newstm.in
 

Similar News