கமுதியில் கடைபிடிக்கப்பட்டு வரும் நெறிமுறையை பாஜக மீறியிருப்பதாக ஊர் மக்கள் பகிரங்க குற்றச்சாட்டு.!!
கமுதியில் கடைபிடிக்கப்பட்டு வரும் நெறிமுறையை பாஜக மீறியிருப்பதாக ஊர் மக்கள் பகிரங்க குற்றச்சாட்டு.!!
ராமநாதபுரம் மாவட்டத்தின், கமுதி பேரூராட்சியில் கடந்த 1970-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது இஸ்லாமிய மற்றும் நாடார் சமூகத்தினருக்கு இடையே கடும் போட்டி இருந்தது. நாடார் சமுதாய வேட்பாளராக செளந்திர பாண்டியன் என்பவரும், இஸ்லாமிய சமூக வேட்பாளரான முகமது இப்ராஹீம் உசைன் என்பவரும் போட்டியிட்டனர். போட்டி தீவிரமடைந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு கலவரமாக மாறியது. இதில் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இஸ்லாமிய சமூக வேட்பாளருக்கு ஆதரவு தந்தமைக்காக ஆதிதிராவிட சமூக மக்களின் குடிசைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. எனினும், அத்தேர்தலில் 420 வாக்குகள் வித்தியாசத்தில் இஸ்லாமிய சமூக வேட்பாளர் வெற்றி பெற்று பேரூராட்சித் தலைவர் ஆனார். இதனைத் தொடர்ந்து 1971-ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவான காதர் பாட்சா (எ) வெள்ளைச்சாமி இரு சமூக மக்களுக்கும் இடையே சமரசம் செய்து வைத்தார். அதன் பிறகு 10 ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.
1986-ம் ஆண்டு காதர் பாட்சா (எ) வெள்ளைச்சாமி, டி.எஸ்.தாவுது, இப்ராஹீம், சகாய ராணி ஆகியோர் முன்னிலையில் அனைத்து சமூகத்தினரின் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒரு முறை நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராகவும், துணைத் தலைவராக கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவரும், அடுத்த முறை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராகவும், துணைத் தலைவராக செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என ஒருமனதாக அனைத்து சமுதாயத்தினர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1986- ம் ஆண்டு தொடங்கி கடந்த 35 ஆண்டுகளாக அனைத்து சமுதாய ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்படுபவர்களே தலைவராகவும், துணைத்தலைவராகவும், வார்டு உறுப்பினர்களாகவும் ஆகி வருகின்றனர். பேரூராட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்சி சார்பாக இல்லாமல் சமுதாய ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுயேட்சைகளாகவே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அந்த வகையில் தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலும், அப்துல் வஹாப் சகாயராணி என்ற திமுக குடும்பத்தைச் சேர்ந்தவரை அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து தலைவர் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். சமுதாய ஒற்றுமை ஏற்பட்டதன் காரணமாக வேறு எந்த அரசியல் கட்சியும் தேர்தலில் போட்டியிடாது, ஊர்கூடி தேர்வு செய்யப்படுவோர் கூட சுயேட்சை என்று தான் மனு செய்துள்ளனர். அந்தவகையில் சகாயராணி உட்பட 11 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 14-வது வார்டு கவுன்சிலராக போட்டியின்றி தேர்வான சத்யா ஜோதி ராஜா என்பவர் அவர் சார்ந்த சமுதாய ஒற்றுமையின் அடிப்படையில் ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்டு ‘சுயேட்சை வேட்பாளர்’ என்று தான் மனு செய்ய இருந்தார். கடைசி நேரத்தில் மேற்கண்ட நெறிமுறைக்கு புறம்பாக அவர் பாஜகவிடம் கடிதம் கொடுத்ததால் பாஜக வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, மதநல்லிணக்க ஒற்றுமையின் கீழ் தேர்வாகி கிடைத்த வெற்றியை மறைத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி முதல் வெற்றியை பெற்றுவிட்டதாக பாஜகவினர் அலப்பறையில் ஈடுபட்டு மதநல்லிணக்கத்தை சிர்குலைக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாக ஊர்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்..
மேலும் பல ஆண்டுகளாக சாதி, மத, அரசியல் மோதல்களை தடுக்கும் நோக்கில் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறையை சுயலாபத்துக்காக பாஜக மீறியதாகவும், இதனால் மதநல்லிணக்கத்துக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்
தற்போதைய கமுதி பேரூராட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வான 11 பேரில் சகாயராணி உள்ளிட்ட 7 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். ஆனால் கட்சியை இவர்கள் அடையாளப்படுத்தாமல் சுயேட்சை என்றே தங்களை அடையாளப்படுத்தியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.