காவலர் தேர்வில் சீட்டிங் செய்த பெண்!!
காவலர் தேர்வில் சீட்டிங் செய்த பெண்!!
புதுச்சேரியில் நடைபெற்று வரும் காவலர் பணிக்கான உடல் தகுதி தேர்வில் உடல் எடை அதிகரிக்க ஆடை மேல் ஆடை அணிந்து வந்த பெண்ணை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 390 கான்ஸ்டபிள், 12 ரேடியோ டெக்னீசியன், 29 டேக் ஹேண்ட்லர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதித் தேர்வு கோரிமேடு போலீஸ் மைதானத்தில் துவங்கி நடந்து வருகிறது.
இதுவரை நடந்த தேர்வில் 1844 ஆண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக தேர்வில் பங்கேற்க முடியாத ஆண்களுக்கு வரும் 21ஆம் தேதி உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது.
மொத்த கான்ஸ்டபிள் பணி இடத்தில் 32 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு துவங்கியது. 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டது.
தேர்வுக்கு அழைக்கப்பட்ட 750 பேரில் 324 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதில் உடல் தகுதியுடன் 188 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பெண்கள் 45 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் உடல் தகுதி தேர்வுக்கு வந்திருந்த பெண் ஒருவரின் நடை மற்றும் உடல் பருமனில் சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து உடற்கல்வி ஆசிரியர்கள் உடனடியாக உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அப்பெண்ணை வரச்சொல்லி பெண் காவலர்கள் மூலம் சோதனை செய்ய உத்தரவிட்டனர். சோதனை செய்த போது அப்பெண் ஒரு ஜீன்ஸ் மீது மூன்று லேயர் பேண்ட் அணிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கூடுதலாக அணிந்திருந்த ஆடைகள் 2.2 கிலோ எடை இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கான்ஸ்டபிள் தேர்வுக்கு வந்த அந்த பெண் 43 கிலோ எடையில் இருந்ததால் உடல் எடை அதிகரித்து காட்டுவதற்காக நான்கு பேண்டுகள் அணிந்து வந்திருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பெண்ணை அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்து எச்சரித்து வெளியே அனுப்பி வைத்தனர்.
newstm.in