ஃபாஸ்ட்டேக்கில் பணம் திருட்டு.. பேடிஎம் மற்றும் என்.பி.சி.ஐ. விளக்கம்..!

ஃபாஸ்ட்டேக்கில் பணம் திருட்டு.. பேடிஎம் மற்றும் என்.பி.சி.ஐ. விளக்கம்..!

Update: 2022-06-27 13:10 GMT

சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் ஃபாஸ்ட் டேக் முறை கடந்த ஆண்டு அறிமுகமானது. வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள 'டிஜிட்டல் ஸ்டிக்கர்' மூலம் ஓட்டுநர் கணக்கில் இருந்து அரசின் கணக்குக்கு சுங்கக் கட்டணம் சென்று சேர்கிறது.

இந்த ஃபாஸ்ட் டேக் நடைமுறையில் மோசடி கும்பல் புகுந்து பணம் திருடுவதாக, சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. அந்த வீடியோவில், ‘சிக்னலில் பிச்சை எடுக்கும் சிறுவன் கையில் ஸ்மார்ட் கைக்கடிகாரம் அணிந்துள்ளான். அவன், சிக்னலில் நிற்கும் கார்களின் கண்ணாடியை துடைத்து விட்டு பணம் பெறுகிறான்.

கண்ணாடியை துடைக்கும் போது, அவன் கையில் உள்ள ஸ்மார்ட் கைக்கடிகாரம் மூலம் ஃபாஸ்ட்டேக்கை ஸ்கேன் செய்து நூதன முறையில் பணம் திருடப்படுகிறது. இந்த திருட்டில், மிகப் பெரிய கும்பல் ஈடுபட்டுள்ளது’ என்று அதில் குற்றம் சாட்டப்பட்டது.

இது முற்றிலும் தவறான தகவல் என பேடிஎம் மற்றும் என்.பி.சி.ஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, பேடிஎம் மற்றும் என்.பி.சி.ஐ. எனப்படும் இந்திய தேசிய பணப்பரிமாற்ற கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அந்த வீடியோ போலியானது. அதில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடுவதுபோல ஸ்மார்ட் கைக்கடிகாரம் மூலம் ஃபாஸ்ட் டேக் பணத்தை திருட முடியாது. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வணிகர்கள் மூலம் மட்டுமே பணத்தை பெற முடியும்.

பல்வேறு சுற்று பரிசோதனைகளுக்கு பின்னரே ஃபாஸ்ட்டேக் உருவாக்கப்பட்டது. எனவே, அது மிகவும் பாதுகாப்பானது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News