பேச்சுகளில் நச்சுத்தன்மை இருக்கிறது.. கிருத்திகாவின் மனு தள்ளுபடி !!

பேச்சுகளில் நச்சுத்தன்மை இருக்கிறது.. கிருத்திகாவின் மனு தள்ளுபடி !!

Update: 2022-02-15 16:51 GMT

குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பப்ஜி மதன், அப்படினு சொன்னா அவர் யாருனு தெரியாத ஆளே இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பப்ஜி மதன். இதற்கு காரணம் எல்லாம் ஆபாச பேச்சுகளும், அதன்மூலம் கிடைத்த லட்சம் லட்சமான சம்பாத்தியமும் தான்.

அதாவது, மதன் மற்றும் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல்கள் மூலமாக பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை நேரடியாக விளையாடியவர் மதன். அப்போது, அதிக பார்வையாளர்கள் வரவேண்டும் என்ற அல்ப ஆசைக்காக, ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன்படி, பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், சிறுமிகளை ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த ஜூன் 18 ஆம் தேதி தருமபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக்கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மதன் குமார் என்கிற பப்ஜி மதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு குறித்து தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்கக்கோரி மதனின் மனைவி கிருத்திகா மனுத்தாக்கல் செய்திருந்தார். மதனின் மனைவி கிருத்திகாவும் இதில் தொடர்புடையவர் என்பதால் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார். கைக்குழந்தை இருப்பதால் அவருக்கு எளிதாக பிணை கிடைத்தது. 

இதனிடையே, இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏழு மாதத்திற்கு மேல் சிறையில் இருப்பதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், உடல் நிலையை காரணம் காட்டியே முன்கூட்டியே விசாரணை கோருவதாகவும், ஆனால் மதனின் உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும், ஃபிசியோதெரப்பி சிகிச்சை மட்டுமே தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், மதனின் பேச்சுகள் நச்சுத்தன்மை உடையதாக உள்ளதாகவும், அவரை ஏன் வெளியில் விட வேண்டுமென கேள்வி எழுப்பினர். மேலும் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு வரும் 22ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதற்கு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனக்கூறி கிருத்திகாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

newstm.in

Similar News