இவர்கள் பதவி உயர்வு கோரமுடியாது.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!
இவர்கள் பதவி உயர்வு கோரமுடியாது.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!
மதுரையில் டிஆர்ஓ-வாக பணியாற்றும் முத்துராமலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ஐஏஎஸ் பதவி உயர்வுக்கான தகுதி எனக்கு உள்ளது.
டிஆர்ஓ-க்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்குவது குறித்து மத்திய அரசின் ஆய்வுக்குழு தான் முடிவு செய்யும். இக்குழுவின் கூட்டத்தை கூட்டவும், எனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “அரசு பொது ஊழியர்கள் தங்களுக்கான பதவி உயர்வை ஒரு உரிமையாக கேட்க முடியாது.
பதவி உயர்வு என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று தான். அதே நேரம், பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான நபர்களை நிர்வாகம் தான் தேர்வு செய்யும்.
பதவி உயர்வு பெற தகுதி இருந்தாலும், தனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென நிர்வாகத்திடம் கேட்க முடியாது. மத்திய ஆய்வுக்குழு கூட்டம் நடந்திருந்தால் தனக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கும் என்பது கற்பனையானது.
எதிர்கால நிகழ்வுகள் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது. டிஆர்ஓ-க்களுக்கான பதவி உயர்வு குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.
இதற்காக ஆய்வுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதை உரிமையாக கோர முடியாது. பணியிடங்களை நிரப்புவது, பதவி உயர்வு வழங்குவது என்பது நிர்வாக ரீதியான முடிவாகும். அது, அரசின் சிறப்புரிமை.
எனவே, குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்புமாறும், பதவி உயர்வு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட முடியாது என்பதால் மனுதாரர் கேட்கும் நிவாரணத்தை வழங்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டார்.