இந்த முடிவால் பள்ளியில் இடைநிற்றல் அதிகரிக்கும்.. தமிழக அரசு பதில் மனு !!
இந்த முடிவால் பள்ளியில் இடைநிற்றல் அதிகரிக்கும்.. தமிழக அரசு பதில் மனு !!
மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை நாடு முழுவதும் கொண்டுவருகிறது. ஆனால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையையும் கடுமையாக எதிர்க்கிறது. அதில் பல்வேறு அம்சங்கள் மாநில கொள்கைக்கு எதிராக உள்ளதாகவும், குலக்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றம்சாட்டுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அர்ஜுனன் இளையராஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கல்வி என்பது மாநில கொள்கை. தேசிய கல்விக் கொள்கை என்பது எந்த சட்டபூர்வ அங்கீகாரமும் இல்லாத வரைவு கொள்கையாக உள்ளது.
69 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசு வேலையில் தமிழில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு என அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து சமத்துவமான கல்வி என்ற அடித்தளத்தை கொண்டுள்ள மதச்சார்பற்ற தமிழகத்தில், இரு மொழிக் கொள்கையும், தாய்மொழியில் அடிப்படைக் கல்வியும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 27.1 சதவீதத்தில் இருந்து 2035-ம் ஆண்டில் 50 சதவீதமாக உயர்த்தும் எண்ணத்தில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டதாகக் கூறும் நிலையில், இலவசக் கல்வி, மதிய உணவு, இலவச புத்தகம், சீருடை, சைக்கிள், காலணி, லேப் டாப், உதவித்தொகை மூலம் 51.4 சதவீத சேர்க்கை விகிதத்தை எட்டி, தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது.
எனவே, தற்போதைய கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தேசிய கல்விக் கொள்கை இடைநிற்றலை அதிகரிக்கும். தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய சூழல், எதிர்கால விருப்பங்களை கருத்தில் கொண்டு, மாநில கல்விக் கொள்கையை வகுக்க டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும், என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
newstm.in