நமது அரசின் நோக்கம் இது தான்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!
நமது அரசின் நோக்கம் இது தான்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!
தமிழக அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான திட்டத்தை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இன்று (19-ம் தேதி) தொடங்கி வைத்தார்.
அத்துடன், இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், ‘நம் பள்ளி நம் பெருமை’ எனும் பிரச்சார வாகனங்களையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “யாராலும் திருட முடியாத சொத்து உண்டு என்றால் அது கல்வி மட்டுமே. அதனால்தான் பள்ளிக் கல்விக்கு இந்த அரசு மிகவும் முக்கியத்துவத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.
மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் சிந்தனை ஒரு நேர்கோட்டில் இருந்தால்தான் கல்வி எனும் நீரோடை சீராக செல்ல முடியும். இதில் யார் தடை போட்டாலும் தடம் புரண்டு விடும்.
குழந்தைகளுக்கு பெற்றோர் வழிகாட்ட வேண்டும். பெற்றோரின் கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம். கல்விக்கு மிக முக்கியத்துவத்தை தமிழக அரசு கொடுத்து வருகிறது.
குழந்தைகளின் கல்வி என்பது சமூக எதிர்காலத்தின் அடித்தளம். அவர்களுக்கு அளிக்கக் கூடிய தரமான கல்விதான் சமுதாய முன்னேற்றத்தினுடைய திறவுகோல்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் கல்வியை கற்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவது தான் நமது அரசினுடைய நோக்கம், குறிக்கோள், லட்சியம்” எனத் தெரிவித்தார்.