கற்பழிப்புகள் அதிகரிக்க இதுதான் காரணம்.. பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை..!

கற்பழிப்புகள் அதிகரிக்க இதுதான் காரணம்.. பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை..!

Update: 2022-02-10 12:46 GMT

“பெண்கள், தங்களுக்கு பிடித்தமான பர்தா, பிகினி உட்பட எந்த ஆடைகளை வேண்டுமானாலும் அணிய அவர்களுக்கு உரிமை உள்ளது. இதை யாரும் தடுக்கக்கூடாது” என்று, காங்கிரஸ் தலைவி பிரியங்கா காந்தி கூறியிருந்தார்.

இதுகுறித்து, கர்நாடக பாஜக எம்எல்ஏ ரேணுகாச்சார்யா பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது; “பிரியாங்கா காந்தி ஒரு பெண். அவர், காங்கிரஸ் தலைவி.

பெண்களின் அடிப்படை உரிமைகளை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. மும்பை, கேரளா ஐகோர்ட்டுகள் பள்ளி - கல்லூரிகளில் சீருடை அணிவது கட்டாயம் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதே கருத்தை தான் கர்நாடக அரசும் கூறியுள்ளது. பிகினி உடைகள் கூட அணியலாம் என்று பிரியங்கா காந்தி கூறியிருப்பது இழிவாக உள்ளது.

கல்லூரி மாணவிகள் படிக்கும்போது கட்டாயம் சீருடை அணிய வேண்டும் அல்லது உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிய வேண்டும்.

சில பெண்கள் அணியும் ஆடைகளால்தான் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரிக்கின்றன. அந்த ஆடைகள் ஆண்களின் ஆசையை தூண்டும் வகையில் உள்ளது. இது நல்லதல்ல.

ஏனென்றால், பெண்களுக்கு நமது நாட்டில் மரியாதை உள்ளது. அவர்களை தாய் இடத்தில் வைத்து பார்க்கிறோம். அதனால், பிரியங்கா காந்தி தனது கருத்தை வாபஸ் பெற்று பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவருக்கு நமது நாட்டின் கலாச்சாரம் - பண்பாடு தெரியவில்லை. அவரது தாயாருடையது இத்தாலி கலாச்சாரம். அவர் அவ்வாறு கூறிய கருத்துக்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. அது சரியல்ல. சீருடை விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யவில்லை” என்று ரேணுகாச்சார்யா கூறினார்.

ரேணுகாச்சார்யா கூறிய இந்த கருத்து பெண்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Similar News