அதிமுக ஆட்சியை இழக்க இதுதான் காரணம்.. சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்..!

அதிமுக ஆட்சியை இழக்க இதுதான் காரணம்.. சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்..!

Update: 2022-06-16 18:39 GMT

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“இன்று (16-ம் தேதி) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. உட்கட்சித் தேர்தலை இன்னும் ஒருமாத காலத்தில் தேமுதிக நடத்த இருக்கிறது. அந்த உட்கட்சித் தேர்தலை எவ்வாறு நடத்த வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 25-ம் தேதி விஜயகாந்த்தின் 70வது பிறந்தநாள். செப்டம்பர் 14 கட்சியினுடைய 18-ம் ஆண்டு விழா. இந்த விழாக்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தவும், எங்களுடைய கட்சியை அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்வதற்கான ஆலோசனையாக இக்கூட்டம் நடைபெற்றது.

5 வருடத்துக்கு ஒருமுறைதான் எங்கள் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடப்பது வழக்கம். விஜயகாந்த் நலமாக உள்ளார். அவர் மாதந்தோறும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்வது வழக்கம்.

தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காததாலேயே அதிமுக ஆட்சியை இழந்தது. இப்போது அதைப் பற்றி அவர்கள் வருந்துகிறார்கள். நாங்கள் சொன்னதை அவர்கள் சரியான நேரத்தில் செய்திருந்தால் இன்று அவர்கள் ஆட்சியில் இருந்து இருப்பார்கள்.

தமிழகத்தில் நடந்த அனைத்து பிரச்சனைக்கும் தேமுதிகதான் முதல் குரல் கொடுத்தது. மக்களுக்காக எங்களுடைய குரலை தைரியமாக கொடுத்திருக்கிறோம். உண்மையான எதிர்க்கட்சியாக தேமுதிக தான் செயல்படுகிறது.

விஜய பிரபாகரனுக்கு கட்சி பொறுப்பு வழங்குவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு எடுப்பார். ஆன்மிகவாதி அரசியல் பேசக்கூடாது. அரசியல்வாதி ஆன்மிகம் பேசக்கூடாது. அவரவர் வேலைகளை செய்தாலே சர்ச்சை இருக்காது” எனக் கூறினார்.

Similar News