அதிமுக மீதான மதிப்பு சரிய இதுதான் காரணம்.. கண்டுபிடித்தார் திருமாவளவன்..!

அதிமுக மீதான மதிப்பு சரிய இதுதான் காரணம்.. கண்டுபிடித்தார் திருமாவளவன்..!

Update: 2022-03-03 18:32 GMT

சென்னையில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை மேயர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், நகராட்சி துணைத் தலைவர்களின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று அறிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடலூரில் துணை மேயர் பதவிக்கு வழக்கறிஞர் தாமரைச்செல்வன் போட்டியிடுகிறார். மேலும், அனைத்து இடங்களிலும் கூட்டணி கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் துணை நிற்க வேண்டும்.

சென்னை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் துணை மேயருக்கு எழுதிக் கொடுத்தோம்; அதில் ஒன்று கிடைத்துள்ளது. மேலும், மாநகராட்சி மேயர் பதவி ஒன்று கேட்டு இருந்தோம், கேட்டது கிடைக்கவில்லை என்றாலும் ஒதுக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம்.

அதிமுக வாக்கு வங்கி சரிந்து விட்டது என்று சொல்ல முடியாது. அதை வழி நடத்த வலிமையான ஆளுமை இல்லை. ஐந்தாண்டு காலம் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவை தோளில் சுமந்து வந்தனர்.

இதனால் அதிமுக மீது வைத்திருந்த மதிப்பு சரிந்து விட்டது. சசிகலா அதிமுகவுடன் இணைவது அவரின் தனிப்பட்ட விருப்பம். அதில் நாம் தலையிட முடியாது.

பாஜக தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லும் அண்ணாமலை அவர்கள், 1, 2 கூட ஒழுங்காக படிக்கவில்லை என்று தான் தெரிகிறது.

பாஜக மூன்றாவது இடம் என்பது ஒரு மாயை, பல இடங்களில் அவர்கள் டெபாசிட் கூட பெறவில்லை. அதை மூடி மறைப்பதற்காக ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

Similar News