உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகளப் பிரிவில் இந்திய ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா (23) தங்கப் பதக்கம் வென்றார். இறுதிச்சுற்றில் அவா் 87.58 மீ. தூரம் எறிந்து முதலிடம் பிடித்தாா்.

ஃபின்லாந்தில் நடைபெற்ற பாவோ நுர்மி போட்டியில் 89.30 மீ. தூரம் எறிந்து 2ஆம் இடம் பிடித்ததோடு புதிய தேசிய சாதனையையும் நீரஜ் சோப்ரா படைத்திருந்தார். இதையடுத்து அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் 88.13 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.54 மீ. தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார்.  உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 2ஆவது இந்தியர் நீரஜ் சோப்ரா என்ற பெருமையையும் பெற்றார்.

அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில் தங்கம் வெல்லாதது குறித்து நீரஜ் சோப்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடினமான சூழலால் சிறிது தடுமாறினேன். அதேசமயம் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காகப் பதக்கம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தங்கம், வெண்கலம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜகுப் ஆகியோருக்கு வாழ்த்துகள். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றார். 

அவர் கடினமான சூழல் என, மைதானத்தில் காற்றின் வேகம் நிலவியதை குறிப்பிட்டு கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.  

 



newstm.in

Tags: