தூத்துக்குடியில் பரபரப்பு.. கோர்ட் முன்பு மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை..!

தூத்துக்குடியில் பரபரப்பு.. கோர்ட் முன்பு மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை..!

Update: 2022-06-22 05:35 GMT

தூத்துக்குடியில், நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அழகன்; இவருடைய மகன் காசிராஜன் (35). தந்தை - மகன் இடையே சொத்துப் பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சொத்து விவகாரத்தில் தனது தந்தை மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் காசிராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் அழகன், அவருடைய தம்பி கடல் ராஜா, உறவினர் காசி துரை ஆகியோருடன் நீதிமன்றம் வந்து ஆஜராகி விட்டு, நீதிமன்றம் மற்றும் தென்பாகம் காவல் நிலையம் எதிரே சென்றுள்ளார்.

அப்போது அங்கு அரிவாளுடன் சென்ற காசிராஜன், திடீரென தனது தந்தை உள்ளிட்ட 3 பேரையும் வெட்டி உள்ளார். சுதாரித்துக் கொண்ட தமிழழகன், கடல் ராஜா, காசி துரை ஆகியோர், காசிராஜனிடம் இருந்த அரிவாளை பிடுங்கி அவரை வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த காசிராஜன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காசிராஜன் வெட்டியதில் காயமடைந்த மூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நீதிமன்றம் மற்றும் காவல் நிலையம் எதிரே நடந்த இந்த கொலை சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News