இன்று பட்டினப்பிரவேச நிகழ்ச்சி.. பாதுகாப்பு அதிகரிப்பு !!
இன்று பட்டினப்பிரவேச நிகழ்ச்சி.. பாதுகாப்பு அதிகரிப்பு !!
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குரு பூஜைவிழா, ஞானபுரீஸ்வரர் கோவில் பெருவிழா ஆகியவை ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும். இந்த விழாவின் 11ஆம் நாள் பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10ஆம் நாளான நேற்று ஆதீனம், நாற்காலி பல்லக்கில் சென்று ஆதீனங்களாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்தார்.
அதாவது, ஆதீன மடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு ஆனந்தபரவசர் பூங்காவில் உள்ள குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் ஆதீன மடத்தை வந்தடைந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இன்று விழாவின் முக்கிய நிகழ்வான பட்டின பிரவேச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு பட்டினப்பிரவேச நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டது. அதாவது பட்டினப்பிரவேச நிகழ்ச்சி க்கு தமிழக அரசு தொடக்கத்தி தடை விதித்து இருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பல்வேறு ஆதீனங்கள், மடாதிபதிகள் சந்தித்து பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி வலியுறுத்தினர். இதை தொடர்ந்து பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது. இதனால் இந்தாண்டு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Newstm.in