தாமிரபரணியில் மூழ்கி வியாபாரி பலி.. மனைவியை தேடும் பணி தீவிரம்..!

தாமிரபரணியில் மூழ்கி வியாபாரி பலி.. மனைவியை தேடும் பணி தீவிரம்..!

Update: 2022-07-17 07:15 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் லுக்மான் ஹக்கீம் (44). இவருடைய மனைவி சகர்பானு (33). லுக்மான் ஹக்கீம் பழைய பேப்பர்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.

இதன் காரணமாக அவர் குடும்பத்துடன் நெல்லை மேலப்பாளையத்தில் வந்து தங்கியுள்ளார். கணவன் - மனைவி இருவரும் இன்று காலை தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்கு சென்றனர்.

அவர்களுடன், மதுரையை சேர்ந்த அவரது உறவினரான முகம்மது உட்பட 2 பேர் சென்றனர். டவுன் கருப்பந்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் 4 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சகர்பானு ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். தண்ணீரில் மூழ்கிய அவர் உயிருக்கு போராடியபடி தத்தளித்து கொண்டு இருந்தார்.

இதைப் பார்த்த அவரது கணவர் லுக்மான் ஹக்கீம் மனைவியை காப்பாற்றுவதற்காக அந்த பகுதிக்கு நீந்திச் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் உறவினர்கள் மற்றும் அருகில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய கணவன் - மனைவியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், லுக்மான் ஹக்கீம் சடலமாக மீட்கப்பட்டார். சகர்பானுவை தேடிப்பார்த்தனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து சகர்பானுவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News