பரிதாபம்.. கர்நாடகாவில் கார் - லாரி மோதல்.. தமிழகத்தை சேர்ந்த தந்தை - மகன் பலி..!

பரிதாபம்.. கர்நாடகாவில் கார் - லாரி மோதல்.. தமிழகத்தை சேர்ந்த தந்தை - மகன் பலி..!

Update: 2022-06-21 05:20 GMT

கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்தில் தர்மஸ்தலா கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலுக்கு தினமும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

இந்த நிலையில், ஹாசன் மாவட்டம் ஆலூர் அருகே நேற்று அதிகாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதின. இதில், சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஆலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

பின்னர் விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகத்தின் ஓசூரை சேர்ந்த கார்த்தி (17), அஞ்சப்பா (40), புனித் (15), கார்த்திக் (19), ராமசந்திரா (40) உட்பட 10 பேர் 2 கார்களில் தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலா கோவிலுக்கு செல்வதற்காக வந்துள்ளனர்.

அப்போது, ஹாசன் மாவட்டம் ஆலூர் அருகே, எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் சென்ற ஒரு கார் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த தந்தை, மகனான அஞ்சப்பா மற்றும் கார்த்தி இருவரும் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தனர்.

மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றொரு காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என்பது தெரியவந்தது. விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News