ஹேர் கலரிங் செய்து கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு நடந்த துயரம் !
ஹேர் கலரிங் செய்து கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு நடந்த துயரம் !
தலை முடியில் கலர் ஹேர்டை அடித்து சென்ற கல்லூரி மாணவியை கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சோகம் நடந்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்துள்ள கடப்பேரி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பல்லாவரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ 2ஆம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவந்த மாணவி அண்மையில், தனது தலைமுடியை கலர் செய்ய முடிவெடுத்தார்.
அதன்படி, கல்லூரி மாணவி தனது தலைமுடிக்கு கலரிங் செய்துக்கொண்டு பின்னர் கல்லூரிக்கு சென்று உள்ளார். ஆனால், இதனை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியை அழைத்து கண்டித்தனர். மேலும், கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோரை வரவழைத்து கல்லூரிக்கு இது போன்று வரக்கூடாது என கூறி கண்டித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, நேற்று மாலை வீட்டில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, மாணவி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in