கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சோகம்.. விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி பலி..!
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சோகம்.. விஷவாயு தாக்கி கூலித்தொழிலாளி பலி..!
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில், தனியார் தொழிற்சாலை கழிவுநீர் தொட்டியின் அடைப்பை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில், பெட்ரோல் நிலைய தொட்டிகளில் பயன்படுத்தப்படும் உலோக பட்டைகள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
இந்த தொழிற்சாலையில் மழைநீர் கால்வாயுடன் இணைந்த கழிவுநீர் தொட்டி அடைப்பை சுத்தம் செய்யும் பணியில் புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்த அரி (34), பலராமன் (52) மற்றும் கோவிந்தன் (46) ஆகியோர் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அந்த கழிவுநீர் தொட்டியில் கழிவுநீர் இல்லாவிட்டாலும் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இருந்து வெளியான விஷவாயு தாக்கி கூலித் தொழிலாளி அரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். விபத்தில் இறந்த அரிக்கு செல்வி (26) என்ற மனைவியும், ஜெனிதா (3) என்ற மகளும் உள்ளனர்.