வேளாங்கண்ணியில் சோகம்.. கடல் அலையில் சிக்கி 3 சிறுமிகள் பலி..!
வேளாங்கண்ணியில் சோகம்.. கடல் அலையில் சிக்கி 3 சிறுமிகள் பலி..!
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த 3 சிறுமிகள், உறவினர்கள் கண் முன்னே கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் என்ற ஊரில் இருந்து 15 பேர் சுற்றுலா வந்தனர். வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு சொந்தமான விடுதியில் தங்கிய இவர்கள், இன்று காலை கடலில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சேவியர் என்பவரின் மகள்களான ஆரோக்கிய ஷெரீன் (19), ரியானா (13) மற்றும் பெஞ்சமின் என்பவரின் மகள் சஹானா (14) ஆகிய 3 பேரும் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.
இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கடலுக்குள் நீந்திச் சென்று மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கீழையூர் கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த மூன்று சிறுமிகள் உறவினர்கள் கண் முன்னே கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.