அசுரன் படத்தில் வருவதுபோன்று காலில் விழவைத்து கொடுமைப்படுத்திய முதியவர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பிச்சனகோட்டகத்தில் கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் நடராஜன் என்பவரின் மகன் நாகூர்மீரானுக்கும், அஞ்சுகண்ணு மகன் கலைசெல்வனுக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் கோவில் திருவிழாவில் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்காமல் ஊர் மக்கள் பஞ்சாயத்து செய்தனர். அதன்படி தகராறில் ஈடுபட்டதாக பஞ்சாயத்தில் கலைசெல்வனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10 ஆயிரத்தை கட்டமுடியாத 65 வயது அஞ்சுகண்ணு, தன்னைவிட வயதில் சிறியவரான நாகூர் மீரான் மற்றும் அவரது கும்பத்தைச் சேர்ந்த சிலரது காலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்திருந்த அஞ்சுகண்ணு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அஞ்சுகண்ணு உயிரிழந்த விவகாரத்தில், அவரை காலில் விழவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் சாலையில் அரசு மருத்துவமனை அருகே சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு சென்ற போலீசார் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாதாக உறுதி அளித்ததால் சாலை மறியலை கைவிட்டனர்.
இந்நிலையில் தற்போது வரை போலீசார் நடவடிக்கை எடுக்காததால், அஞ்சுகண்ணு குடும்பத்தினர், உறவினர் மற்றும் கிராமத்தினர் ஏராளமானோர் திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகே இரண்டாவது நாளாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அஞ்சுகண்ணுவின் மகன் கலைசெல்வன் தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து மறியல் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். மறியலால் திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை, நாகை சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
newstm.in