மின்சாரம் தாக்கி ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம்!!
மின்சாரம் தாக்கி ஒரு குடும்பமே உயிரிழந்த சோகம்!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொத்தனார் வேலை செய்து வந்த வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த நிவாஸ் ரத்தினம் (30) தனது வீட்டில் புதிய மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின் இணைப்பு கொடுக்க முற்பட்ட நிவாஸ் ரத்தினம் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.
இதனால் துடிதுடித்த கணவரை காப்பாற்ற அவரது மனைவி ஹேமா (25) தனது இரண்டு வயது மகள் நிகன்யாவுடன் வந்துள்ளார். இதில் மூவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே மூவரும் உயிரிழந்தனர்.
இதையடுத்து மாலை வரை இவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அருகில் வசிக்கும் பெண் ஒருவர் நிவாஸ் ரத்தினம் வீட்டிற்கு வந்துள்ளார். கணவன், மனைவி, குழந்தை என மூவரும் அசைவற்று கிடந்துள்ளனர்.
அப்பெண் அவர்களை எழுப்ப முயன்ற போது அவரையும் மின்சாரம் தாக்கியது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர் சப்தமிட்டார். அவரது அலறல் சப்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்து மூவரையும் மீட்டர்.
அப்போது அவர்கள் ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து இறந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார், மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
newstm.in