திண்டுக்கல் அருகே சோகம்.. கார் கவிழ்ந்து விபத்து.. 6-ம் வகுப்பு மாணவர் பலி..!

திண்டுக்கல் அருகே சோகம்.. கார் கவிழ்ந்து விபத்து.. 6-ம் வகுப்பு மாணவர் பலி..!

Update: 2022-06-04 17:06 GMT

பட்டிவீரன்பட்டி அருகே, கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் பரத்குமார் (36). இவரது உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே உள்ள அய்யன் கோட்டைக்கு வந்துள்ளார்.

பின்னர், அவரது உறவினர் முனியப்பன் மகன் ராகேஷ் (11), அய்யன் கோட்டையைச் சேர்ந்த முருகவேல் என்பவரின் மகன் ரக்சன் (9) ஆகியோரை தனது காரில் அழைத்துக்கொண்டு அய்யம்பாளையம் மருதாநதி அணையை சுற்றி பார்த்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, மருதாநதி ரோட்டில் ஒத்தக்கடை என்ற இடத்தில் உள்ள திருப்பத்தில் திரும்பிய போது எதிர்பாராதவிதமாக சாலையின் ஓரத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராகேஷ், ரக்சன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.


அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், செல்லும் வழியிலேயே ராகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரக்சன் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் இறந்த ராகேஷ் பட்டிவீரன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News