சுப நிகழ்ச்சிக்கு செல்லும்போது சோகம்.. 3 பெண்கள் பலி, 25 பேர் படுகாயம் !

சுப நிகழ்ச்சிக்கு செல்லும்போது சோகம்.. 3 பெண்கள் பலி, 25 பேர் படுகாயம் !

Update: 2022-06-11 17:50 GMT

சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகே பூச்சியேந்தல் கிராமத்தை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்கள் காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள நகர்பகுதியில் நடைபெறவிருந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுற்றுலா வேன் ஒன்றில் சென்றனர். 

அனைவரும் வேனுக்குள் உற்சாகமாக பாடல்பாடிய நிலையில் இருந்துள்ளனர். வேன் காரைக்குடி - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புதிய பத்திரபதிவு அலுவலகம் அருகே சென்றபோது, சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த வேனின் ஒரு பக்கம் அப்படியே நொறுங்கியது. இந்த கோரவிபத்தில் மணிமேகலை (55) என்றபெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தவப்பிரியா (22), பாப்பாத்தி (60) ஆகிய இருவரும் சிசிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். 

விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே தீயணைப்பு நிலையம் இருந்ததால் அங்கிருந்து மீட்பு குழுவினர் விரைவாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 4 குழந்தைகள் உள்பட 25  பேர் பலத்த காயத்துடன் காரைக்குடி மாவட்ட அரசு தலைமை  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு குழந்தை, தாய் மற்றும் ஆண் ஒருவர் என மூன்றுபேர் கூடுதல் சிசிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு காரைக்குடி டி.எஸ்.பி வினோஜி, குன்றக்குடி காவல் நிலைய காவல்துறையினர் மற்றும்  தீயணைப்பு துறையினர், செஞ்சிலுவை சங்கத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குன்றக்குடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை என கூறப்படுகிறது. 


newstm.in

Similar News