கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள மணாடிகுப்பம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் புரங்கணி கிராமத்தை சேர்ந்த முரட்டுகாளை கபடி அணி பங்கேற்றுள்ளது.

இந்த அணியை சேர்ந்தவர் விமல். சிறந்த கபடி வீரரான இவர் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை அள்ளி குவித்துள்ளார். இந்நிலையில், மாநில அளவிலான இந்த போட்டியிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற நோக்கத்தோடு களத்தில் இறங்கியுள்ளார் விமல்.

எதிர் அணி வீரர்களை தொட்டு விட்டு மூச்சு விடாமல் கபடி கபடி என முனகிய அவர் அந்த விளையாட்டு மைதான மண் தரையில் மயங்கி உள்ளார்.

இதை பார்த்த சக வீரர்கள் விமலின் அருகே வந்து அவரை எழுப்ப முயற்சித்துள்ளனர். ஆனால் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்த விமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சக மற்றும் எதிர் அணி வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.