ஆசை காட்டி இளம் பெண்ணிடம் மோசடி: இருவர் கைது.. ஒருவருக்கு வலை!
ஆசை காட்டி இளம் பெண்ணிடம் மோசடி: இருவர் கைது.. ஒருவருக்கு வலை!
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண்ணிடம், ஆன்லைன் வழியாக அறிமுகமான ஒருவர், ‘வீட்டு உபயோக பொருட்களை வாங்கி, வீட்டில் இருந்தே விற்பனை செய்து அதிக வருமானம் ஈட்டலாம்’ என்பது போன்று மூளைச் சலவை செய்யும்படியாக அடிக்கடி பேசி, அப்பெண்ணிடம் இருந்து ரூ.2.80 லட்சத்தை பல்வேறு தவணைகளாக பெற்று ஏமாற்றியுள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் புதுக்கோட்டை சைபர் கிரைம் பிரிவில் கடந்த மாதம் 25-ம் தேதி புகார் அளித்த நிலையில், காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போனுக்கு வந்த எண்களைக் கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அப்பெண்ணிடம் மோசடி செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடத்துப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் காளிமுத்து (28), ராஜகோபாலன் மகன் மன்னவன் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து 2 செல்போன் மற்றும் ஒரு கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய, முதல் குற்றவாளியான துபாயில் தங்கி இருக்கும் சோமசுந்தரம் என்பவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.