ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. சென்னை மாநகராட்சி அதிரடி..!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. சென்னை மாநகராட்சி அதிரடி..!

Update: 2022-06-03 16:42 GMT

சென்னை மாநகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு அம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி மூலம் செயல்படும் 283 பள்ளிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

அதை தக்க வைக்கும் வகையிலும், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் பல நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், “அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

பள்ளிகள் திறந்தவுடன் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு கல்வித்துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு அம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் காலை 8 மணிக்கு சிற்றுண்டி வழங்க ஆலோசிக்கப்பட்டது. காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவு அருந்தி விட்டு வகுப்பிற்கு செல்ல முடியும்.

அம்மா உணவகங்களில் விற்பனை குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதை மேம்படுத்தும் வகையில் காலை சிற்றுண்டியை அங்கிருந்து குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News