இரண்டு நாட்கள் கடையடைப்பு.. ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கும் அபாயம்..!

இரண்டு நாட்கள் கடையடைப்பு.. ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கும் அபாயம்..!

Update: 2022-05-16 10:24 GMT

நூல் விலை உயர்வைக் கண்டித்து ஈரோடு கிளாக் மெர்சண்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜவுளி கடைகள் இன்றும், நாளையும் 2 நாட்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் பின்னலாடைத் தொழில் முடங்கிப் போன நிலையில் நூல் விலை உயர்வு மேலும் பாதிப்படையச் செய்துள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நூல் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 50 சதவீதம் அளவிற்கு உயர்ந்து, கிலோ ரூ.360 முதல் ரூ.400 வரை அதிகரித்தது. இந்த ஆண்டும் நூல் தரம் வாரியாக ரூ.400 முதல் ரூ.470 வரை விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து இன்றும் (16-ம் தேதி), நாளையும் (17-ம் தேதி) ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 25 சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

இதன் மூலம், தினசரி ஜவுளி சந்தையில் 280 கடைகளும், 780 வாரச்சந்தை கடைகளும், அசோக புரத்தில் 2,000 கடைகளும், டிவிஎஸ் வீதியில் 150 கடைகளும், சென்ட்ரல் தியேட்டர் சந்தையில் 1500 கடைகளும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், சுமார் ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Similar News