ஒரு பெண்ணுக்காக இருவர் சண்டை.. அரிவாள் வெட்டில் முடிந்த சோகம் !!
ஒரு பெண்ணுக்காக இருவர் சண்டை.. அரிவாள் வெட்டில் முடிந்த சோகம் !!
சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகர் 8ஆவது தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (23). இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். ரஞ்சித்குமாரும், கொளத்தூர் பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த ஒராண்டாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும், அப்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த விஷ்ணு பிரகாஷ் என்பவரும் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனால் ரஞ்சித்குமார்- விஷ்ணு பிரகாஷ் இடையே பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ரஞ்சித்குமார் வேலை செய்யும் சலூனுக்கு சென்ற விஷ்ணு பிரகாஷ், ‘நான் காதலித்த பெண்ணை நீ எப்படி காதலிக்கலாம்’ என்று தகராறு செய்துள்ளார்.
அதற்கு அவர், அந்த பெண் என்னை காதலிப்பதால் தான் நானும் காதலிக்கிறேன் என கூறியுள்ளார். இப்படி பேசிக்கொண்டிருந்தப்போது, திடீரென வாக்குவாதம் முற்றியது. இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ரஞ்சித்குமார் தனது தம்பி அஜித்குமாருக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார். இதேபோல், விஷ்ணு பிரகாஷ் தனது தரப்புக்கு நண்பர்கள் 5 பேரை சலூன் கடைக்கு வரவழைத்துள்ளார். இதையடுத்து, அங்கேயே இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது விஷ்ணு பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டினர். தடுத்த அஜித்குமாரையும் வெட்டிவிட்டு அக்கும்பல் தப்பியோடியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஷ்ணு பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். பெண் விவகாரத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டுவிழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in